நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11-வது அறிக்கையில் இந்தியைத் திணிக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, தேசிய இனங்கள் மீது இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பரிந்துரைகளை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஐஐடி, ஐஐஎம், மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டுமெனவும், மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே வேட்டுவைக்கும் பேராபத்தாகும்.