சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக அடுத்த மாதம் பதவியேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட், 2 ஆண்டு காலம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட், முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி சந்திரசூட்டின் மகன் ஆவார். நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் 1978ல் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 1985ல் ஓய்வு பெற்றவர்.
அவர் எமர்ஜென்சி காலத்தில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர்.
“கிஸ்ஸா குர்சி கா” படம் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு ஒய்.வி.சந்திரசூட் தனது பதவிக் காலத்தில் சிறை தண்டனை விதித்தார். எமர்ஜென்சி காலத்தில் இந்தப் படத்தை இந்திய அரசு தடை செய்தது.