உக்ரைன் நாட்டின் டோனெட்ஸ்க், ஜபோரிஜ்ஜியா உள்ளிட்ட 4 பகுதிகளை ரஷியா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதுபற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து விலகி இருந்தன.
எனினும், உக்ரைனில் நடந்து வரும் போரில், பொதுமக்களின் உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படுவது மற்றும் குடிமக்கள் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளது. இந்த சூழலில், வாக்கெடுப்பின்போது, காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானிய தூதர் முனீர் அக்ரம் பேசினார். உக்ரைன் போர் சூழலை அதற்கு இணையாக கூறி ஒப்பிடுவதற்கு அவர் முயன்றார்.
இதற்கு கடுமையான முறையில் பதிலளித்த ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ், என்னுடைய நாட்டுக்கு எதிராக மடத்தனம் வாய்ந்த மற்றும் அர்த்தமற்ற விசயங்களை குறிப்பிட்டு, ஐ.நா. அமைப்பை மீண்டுமொரு முறை தவறாக பயன்படுத்த வெளிநாட்டு குழு ஒன்று முயற்சிப்பதனை நாம் காண்கிறோம். ஆச்சரியப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை என கூறினார்.
தொடர்ந்து பொய்களை கூறும் மனப்பாங்குடன் இதுபோன்ற பேச்சுகள் அமைந்துள்ளன. இவை எத்தகைய மதிப்புக்கும் உரியவை அல்ல. ஜம்மு மற்றும் காஷ்மீரின் முழு பகுதியும் இப்போதும், எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். எங்களுடைய குடிமகன்கள் வாழ்க்கைக்கான மற்றும் சுதந்திரமுடன் செயல்படுவதற்கான உரிமைகளை அனுபவிக்கும் வகையில், எல்லை கடந்த பயங்கரவாத செயலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அவர் நேரிடையாக கூறினார்.