பாறைகளும் உயரமான மலை உச்சிகளும் நிரம்பியதுதான் கிராண்ட் பள்ளத்தாக்கு. 277 மைல் நீளமும், 18 மைல் அகலமும், ஆறாயிரம் அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கு உருவானதன் காரணம், கொலராடோ ஆறு. பல கோடி ஆண்டுகளுக்கு முன், இந்த இடம் பாறைகளால் ஆன, தட்டையான, ஒரு பிரமாண்ட பீடபூமியாக இருந்தது.
மழையும், உருகிய பனியும், புயல் காற்றும், கொலராடோ ஆறும் இணைந்து 17 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பீடபூமியைச் செதுக்கி, பாறைகளை அரித்து, இந்த பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளது. * பல வண்ண பாறைகள் கிராண்ட் பள்ளத்தாக்கில் இருபது அடுக்குகளைக் கொண்ட பாறைகளைக் காண முடியுமாம்.
இதனால் இவ்விடம் புவியியல் நிபுணர்களின் முக்கிய ஆராய்ச்சித் தளமாக விளங்குகிறது. பாறை, மண் அடுக்குகள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, ஊதா நிறங்களில் காணப்படுகின்றன.
பாறைகளில் உள்ள தாதுக்கள்தான் இவற்றுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. இங்குள்ள வடக்குப் பகுதி ‘வட விளிம்பு’ (North rim) எனவும், தெற்குப் பகுதி ‘தென் விளிம்பு’ (South rim) எனவும் அழைக்கப்படுகின்றன.