8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:- இந்தியாவில் நடைபெறும் டி 20 போட்டிகளிலும், சர்வதேச இருதரப்பு டி 20 தொடர்களிலும் பேட்ஸ்மேன்கள் மைதானத்தை சுற்றிலும் பந்துகளை அடித்து நொறுக்குவார்கள் என்று கூறுவது நியாயமானதுதான்.
ஏனெனில் இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சிறியவை. 30 அடி வட்டத்துக்கு அருகிலேயே எல்லைக்கோடு உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.