இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 1952-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ராணியாக ஆட்சி நடத்தியவர். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில், உடல்நல குறைவால் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி காலமானார்.
இதனை பக்கிங்காம் அரண்மனை முறைப்படி அறிவித்தது. இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் 3-ம் சார்லஸ் (வயது 73) அறிவிக்கப்பட்டார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்ற பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடி சூட்டப்படுவார்.
இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும்
பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.