கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் இருந்து கேதார்நாத்க்கு புறப்பட்டுச்சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா,சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி வரை மோசமான வானிலையின் காரணமாக கூட இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:- உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிட வேண்டுமென்று அம்மாநில அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்