இந்தியாவின் நிதி தலைநகரம் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் இன்னும் பாதுகாக்கப்படுவதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது. ஐ.நா பாதுகாப்பு அவையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுப் பேசினர். அப்போது ஜெய்சங்கர் பேசியதாவது; 26/11 தாக்குதலுக்கு காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
அவர்களை தண்டிக்க முடியவில்லை. இந்த தாக்குதல் மும்பை மீதானது அல்ல. சர்வதேச சமூகத்திற்கு எதிரானது. பயங்கரவாதிகளை பொறுப்பேற்க செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் வலுவாக வழங்க வேண்டியது மிகவும் முக்கியம்.
பயங்கரவாத தடுப்புக்கு ஐக்கிய நாடுகள் அவை முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எப்.ஏ.டி.ஏப் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாதத்திற்கு எதிராக மிதமான அணுகுமுறையை பின்பற்றுவதில்லை என்பதில் ஐ.நா உறுதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்” என்றார்.