எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் ஆகிய நடவடிக்கைகளை எடுத்தார்.
இதனிடையே டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை குறைக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளதாகவும், பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாட்கள் மதிப்புள்ள பணி நீக்க ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. டுவிட்டரில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோவின் படி, எந்தெந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை, டுவிட்டர் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை(இன்று) காலை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், எத்தனை ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்பதை மெமோவில் விவரிக்கவில்லை. நவம்பர் 4 ஆம் தேதி காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். மேலும், டுவிட்டரின் அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.