குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி, பாலம் இடிந்து விழுந்ததில் 39 சிறுவர்களும் 16 சிறுமிகளும் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் பலியான 135 பேரில் 55 பேர் குழந்தைகள் மற்றும் அவர்களில் 100 பேர் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அதில் 18 மாத பச்சிளங்குழந்தை தொடங்கி 17 வயதுடைய சிறார்கள் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 வயதுடைய சிறார்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
குழந்தைகளை தவிர்த்து இந்த விபத்தில் 45 ஆண்களும் 35 பெண்களும் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.