பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து படகு மூலம் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற. நிலையில் அவர்களிடம் கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டதையடுத்து அவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத் தீவு பகுதிகளில் இருந்து மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 பேர் அகதிகளாக இன்று சனிக்கிழமை காலை இராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள நடுத்துறை கடற்கரைக்கு சென்றனர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அப்பாவி மக்கள் அங்கு வாழ வழி இன்றி அகதிகளாக இந்தியாவிற்கு செல்கின்றமை அன்மைய நாட்டிகளாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் கருக்குழாலை, முல்லைதீவு சிலாவத்தை, மன்னார் தெக்கம் மடு பகுதிகளை சேர்ந்த மூன்று ஆண்கள், மூன்று பெண்கள், மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு 3 மாத ஆண் குழந்தை உட்பட பத்து பேர் மன்னார் சென்று தலா ஐம்பதாயிரம் ரூபாய் படகு கட்டணமாக செலுத்தி நேற்று இரவு பிளாஸ்டிக்படகு ஒன்றில் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கும் பாம்பனுக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் நடுத்துறை கடற்கரையில் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு படகு திரும்பிச் சென்றுள்ளது.
இதன்போது தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் காளிதாஸ் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் அப்பகுதிக்கு சென்று அவர்களை மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் அனைவரையும் மண்டபம் முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், இதுவரை இலங்கை இருந்து 199 பேர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது