செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மாவட்ட தலைநகரில் இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் 5 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா்.
அனைத்து நோய்களுக்கும், இங்கு சிகிச்சை அளிப்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் இந்த ஆஸ்பத்திரி எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில், சிகிச்சையின்போது வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு மலை போல் காட்சியளிக்கிறது. உடனுக்குடன் அகற்றப்படாததால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் எலும்பு சிகிச்சை பிரிவு, இருதய பரிசோதனை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி போன்ற பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களுக்கும் அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த மருத்துவ கழிவுகளை, நகராட்சி துப்புரவு ஊழியர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.