வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் அடங்கலான குழுவினரை நேற்று (15.11.2022) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடும் போது இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தில் ஒரு மணிநேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் அரசியல் ஸ்தீரத்தன்மை அற்ற நிலமை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு பற்றியும் எடுத்துக் கூறியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.