Home இலங்கை இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி

இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி

by Jey

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா நேற்று (16) இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து உரையாடியனார்.

ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, நாடு திரும்பும் வழியிலேயே அவர் இலங்கைக்கு மிக குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் கட்டுநாயக்கவிலுள்ள விமானப்படை தளத்தில் இடம்பெற்றது என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, இலங்கையில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

விசேடமாக, சமூகங்களிடையே நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தை அடைவதற்கான நம்பகத் தன்மையுடனான உண்மையை கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதற்காக தென்னாபிரிக்காவின் உதவி, ஆலோசனை மற்றும் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

related posts