அதிர்ச்சியை ஏற்படுத்திய கால்பந்து வீராங்கனை உயிரிழப்பை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா? நோயாளிகள், பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
” அரசு டாக்டர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது குறித்து நோயாளிகள், பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
” நாட்டு மக்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில் தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17 ஆயிரத்து 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஏழை-எளிய, பாமர மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த ஆஸ்பத்திரிகள்-61, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி-1, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள்-18, வட்டம்/வட்டம் சாரா ஆஸ்பத்திரிகள்-272, ஆரம்ப சுகாதார நிலையங்கள்-1,804, துணை சுகாதார நிலையங்கள்-8 ஆயிரத்து 713, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்-463 ஆகிய எண்ணிக்கையில் ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.