ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை 5,99,636 குழந்தைகள் பிறந்ததாகவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.9 சதவீதம் குறைவு என்றும் அந்த நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பிறப்புகளை ஊக்குவிக்க கர்ப்பம், பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான மானியங்களை உயர்த்துவது உள்பட பல்வேறு விரிவான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறபோதும், பிறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் மக்கள்தொகை வீழ்ச்சி ஆகியவை ஜப்பானின் தேசிய வலிமையை சிதைக்கும் காரணிகளாக இருப்பதாக கூறி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு கடந்த வாரம் பிரதமர் புமியோ கிஷிடாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.