கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திடவும்; புஞ்சை நிலங்களையும், தரிசு நிலங்களையும், தகுந்த விளைச்சல் நிலங்களாக மாற்றிட புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 2,300 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தது. தற்போது, மற்றுமொரு பேரிடியாக கோவையில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 3,900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. முன்னுக்குப் பின் முரணாக செய்வதுதான் திராவிட மாடல் போலும்!