Home இலங்கை ‘அரசியல்’, ‘தொழிற்சங்க’ தாக்குதலை தொடுப்பதற்கு காங்கிரஸ் தயார் – பாரத் அருள்சாமி

‘அரசியல்’, ‘தொழிற்சங்க’ தாக்குதலை தொடுப்பதற்கு காங்கிரஸ் தயார் – பாரத் அருள்சாமி

by Jey

ஹட்டனில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரான பாரத் அருள்சாமி இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்க முடியாது, அது வெறும் பகல் கனவு மாத்திரமே என  தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் – அதாவது 8 அடி அல்ல 64 அடி பாய்ந்தேனும் ‘அரசியல்’, ‘தொழிற்சங்க’ தாக்குதலை தொடுப்பதற்கு காங்கிரஸ் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அதிகரித்துள்ளது. உலகில் உணவுக்கான பணவீக்க பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. அதேபோல மருந்து தட்டுப்பாடும் நிலவுகின்றது.

இவ்விரு பிரச்சினைகளும் மலையகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, இவ்விவகாரங்கள் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

இதன்போது எமது மக்களுக்கான நிவாரண திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்படும். அதேபோல எமது மக்களுக்கான தற்காப்பு பொருளாதார திட்டங்கள் சம்பந்தமாகவும் யோசனைகள் முன்வைக்கப்படும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, ஒரு சிலர் சுற்றுலா விசாவில் புலம்பெயர் தொழிலாளர்களாக செல்கின்றனர். ஆட்கடத்தலில் ஈடுபடும் ஒரு சில விசமிகள் எமது சமூகத்திலும் உள்ளனர்.
வெளிநாடு செல்வோருக்கான தகவல்

எனவே, வெளிநாடு செல்ல இருப்போர் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களையே நாட வேண்டும். இது சம்பந்தமாக தோட்ட வாரியாக எமது இளைஞர், மகளிர் அமைப்புகள் ஊடாக விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

எங்களின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும் சரி, தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் சரி, தற்போதைய தலைமைத்துவத்தின் கீழும் சரி, மக்களுக்கான அரசியல், தொழிற்சங்க பயணத்தையே காங்கிரஸ் முன்னெடுக்கின்றது.

மக்கள் நலனே எமக்கு முக்கியம். மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு தக்க பாடங்களை புகட்டியுள்ளோம். அச்சுறுத்தல்கள் மூலம் காங்கிரஸை அடிபணிய வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

related posts