Home இலங்கை சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் – பெற்றுக்கொள்ளப்பட்ட 14 முக்கிய மருந்துகள்

சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் – பெற்றுக்கொள்ளப்பட்ட 14 முக்கிய மருந்துகள்

by Jey

இந்தியக் கடன் வரியிலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுகாதாரத் துறையின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் நேற்று (01.12.2022) அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கடன் வரியிலிருந்து பெறப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து மீதம் உள்ள 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அந்நிய செலாவணி நெருக்கடியின் காரணமாக இலவச சுகாதார தேவையை பூர்த்தி செய்ய சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளை பராமரிக்கவும், தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கவும் தவறியமையினால், நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளின் சேவையை பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் மானியத்தைக் கொண்டு தேவையான 14 முக்கிய மருந்துகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

related posts