உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 284-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ரஷியாவின் தொழில்துறையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ரஷியாவின் பொருளாதாரம் முழுமையாக கச்சா எண்ணெய்யை சார்ந்ததாக மாறியுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு தொழில்துறையில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ரஷியா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அதன்படி, 500-க்கும் மேற்பட்ட பொருட்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷியா பட்டியல் கொடுத்துள்ளது.
14 பக்கங்களை கொண்ட அந்த பட்டியலில் கார் எஞ்சின் உதிரி பாகங்கள், சீட் பெல்ட் முதல் விமானத்தின் லேண்டிங் கியர், ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள், விமான டயர்கள் வரை என 500-க்கும் மேற்பட்ட பொருள்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது. 500 பொருட்கள் அடங்கிய பட்டியலில் ஆயத்த ஆடை தயாரிப்பு பயன்படும் நூல் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெற்றுள்ளது.
500-க்கும் மேற்பட்ட பொருட்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷியா கேட்டுள்ள நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்த தகவல் வெளியாகவில்லை. ரஷியா கேட்கும் பொருட்களை ஏற்றுமதி செய்தால் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என இந்திய நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் ரஷியா கேட்கும் பொருட்களை இந்தியா மறைமுகமாக வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.