ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான தயார் நிலை பற்றி ஆலோசனை செய்வதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முதன் முதலாக அறிவிப்பை வெளியிட்டார்.
எனவே தமிழகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது, அவர் டெல்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலையில் அவர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றுவிட்டு, கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அன்றிரவே சென்னைக்கு திரும்புகிறார்.
டெல்லிக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டத்திற்கு வரும் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் வரவேற்கிறாரே தவிர, தனித்தனியாக யாரையும் சந்தித்து பேச திட்டமிடவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே பிரதமர் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இடையேயான தனிப்பட்ட சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.