உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பஸ்-ரெயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம்.
சமீபத்தில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாலும், பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று கார்த்திகை தீப திருவிழாவும் வருவதால் இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளனர்.
அதன்படி பஸ்-ரெயில் நிலையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் போலீஸ் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. பயணிகள் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படும். மோப்ப நாய்களும் ரெயில் நிலையங்களை சுற்றி வலம் வரும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் மிக உன்னிப்பாக கவனிப்பார்கள்