பொங்கல் பண்டிகையில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘மாஸ்டர்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
இது விஜய்க்கு 67-வது படம். படப்பிடிப்பு பூஜை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தொடர்ந்து சென்னையிலேயே 2 வாரங்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
அதன் பிறகு காஷ்மீர் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். அங்கு தொடர்ச்சியாக 2 மாதங்கள் படப்பிடிப்பை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இது மும்பை தாதாக்கள் பின்னணியில் முழு அதிரடி படமாக தயாராக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
‘ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கி இருக்கிறார். எனவே அந்த படத்தின் சாயலும் விஜய்யின் 67-வது படத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத் உள்பட பிரபல நடிகர்கள் பலர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். கதாநாயகியாக நடிக்க திரிஷாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.