ரஷியாவின் 2 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக நேற்று ரஷிய விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 10 மாதங்களாக போர் நடத்தி வருகிறது.
இந்த போரில் இருதரப்பும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஆனால் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இருநாடுகளும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷியா மற்றும் கிரீமிய தீபகற்பத்தை இணைக்கும் முக்கிய மேம்பாலத்தில் லாரி மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள மின்நிலையங்கள் உள்பட பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.