இலங்கையில் கொழும்பு- பொரளை தனியார் வைத்தியசாலையின் உடலுறுப்புக் கடத்தல் மோசடியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்புப்பட்டிருக்கிறார்களா என்பதை வெளிக்கொணருவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி சட்டத்தரணி நாயகம் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மனித உடல் உறுப்பு வர்த்தக குழுவின் பிரதான தரகர் என கூறப்படும் சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று முன்தினம்(05.12.2022) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரலாற்றில் மிகவும் வித்தியாசமான வழக்கு
இந்நிலையில், குற்றப்புலனாய்வுத் துறையினர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சட்டத்தரணி நாயகம், இது இலங்கையின் குற்றச் செயல்களின் வரலாற்றில் மிகவும் வித்தியாசமான வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடியானது கொழும்பு நகரில் வசிக்கும் வறுமையில் வாடும் மக்களை இலக்கு வைத்து இரகசியமான முறையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5 மில்லியன் ரூபா முதல் 12 மில்லியன் ரூபா வரை வழங்குவதாக வாக்குறுதியளித்து 30-42 வயதிற்குட்பட்டவர்களின் சிறுநீரகங்களை வழங்குமாறு தரகர் வற்புறுத்தியுள்ளார்.
அவர்களில் இரண்டு குழந்தைகளுக்கு பாலூட்டும் தாயும் அடங்குகிறார்.
இதேவேளை தகவல்களின்படி, இந்த தனியார் மருத்துவமனையில் மொத்தம் 52 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.