துருக்கி நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.
அப்போது அதிபர் தையிப் எர்டோகன் தலைமையிலான ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
அப்போது ஆளும் ஏகேபி கட்சியை சேர்ந்த ஜாபர் இசிக் என்கிற உறுப்பினர், குட் கட்சியின் உறுப்பினரான உசைன் ஓர்சின் முகத்தில் குத்தினார். இதில் 58 வயதான உசைன் நிலைகுலைந்து விழுந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து உசைன் ஓர்ஸ் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு காயமடைந்த சம்பவம் துருக்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.