க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று அம்பிட்டிய பிரதேசத்தில் சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மாணவனின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபர் அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள குருசகந்தே பாத்தும் எனப்படும் பி.பி. சஞ்சீவாவின் தாயார் தனது மகன் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொலிஸாருக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
எனது மகன் இவ்வளவு மோசமான குற்றவாளியாக மாறியது அவருடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளால் தான்.எந்த குற்றமும் செய்தால் அவரைக் கைது செய்யாமல் பிணையில் வெளியில் வருவதற்கு பொலிஸாரே உதவி செய்வார்கள் என தெரிவித்து தாயார் கையெழுத்திட்ட கடிதமொன்று பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நிதியுதவியுடன் சந்தேகநபரை பாதுகாத்து வரும் அந்த பொலிஸ் அதிகாரிகளின் பெயர், ஊர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அந்தக் கடிதத்தில் உள்ளதாகவும், கடிதத்தின் பிரதிகள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குண்டர்கள் உட்பட பல குற்றவாளிகள் தொடர்பான முழு தகவல்களும் கடிதத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரின் தாயார் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்.