தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார்.
அவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் வலுத்து வந்தன. ஆனால் அவை தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என கூறி அவர் நிராகரித்தார்.
அவசர நிலையை அறிவித்த அதிபர் இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிரடியாக அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அந்த நாட்டின் டெலிவிஷனில் தோன்றிப் பேசினார்.
நாட்டில் அவர் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கிற வகையில் அங்கு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார்.
இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த முடிவை எதிர்த்து மந்திரிகள் பலரும் பதவியை ராஜினாமா செய்தனர்.