இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது.
2008ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த வழக்கிலேயே அவருக்கு அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீது அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபாத் புலத்வத்த “திரிபோலி படைப்பிரிவு” என அழைக்கப்படும் இரகசிய இலங்கை இராணுவப் படைப்பிரிவின் தலைவராக இருந்தார்.
இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல்
2008 மே மாதத்தில் 7031(சி) பிரிவின் படி, சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனை போன்ற மனித உரிமை மீறல்களில் மேஜர் பிரபாத் புலத்வத்த ஈடுபட்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள தகவலை சுட்டிக்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்காக, 2020 பெப்ரவரியில், முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.