Home விளையாட்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம் வீரர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம் வீரர்

by Jey

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 37), களமிறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.

அதிலும் அவருக்கு பதிலாக 21 வயது இளம்வீரர் ரேமோஸ் களமிறக்கப்பட்டார். இத்தனைக்கும் லீக் போட்டிகள் அனைத்திலும் ரொனால்டோவே ஆடும் லெவனில் இடம்பிடித்திருந்த நிலையில், முக்கிய நாக் அவுட் போட்டியில் அவர் உக்காரவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் போர்ச்சுகல் அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தே அந்த அணி அசத்தலாக விளையாடியது.

அதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம்வீரர் ரேமோஸ் களத்தில் சிறப்பாக செயல்பட்டு ஹட் ட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

ஏற்கனவே கிளப் போட்டிகளில் ரொனால்டோ புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய அணியிலும் அவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் “உலகின் தலைசிறந்த வீரரை 90 நிமிடங்கள் ரசிக்க முடியாமல் போனது என்ன அவமானம்.

ரசிகர்கள் ரொனால்டோவை கேட்பதையும் அவரது பெயரைச் சொல்லி கத்துவதையும் நிறுத்தவில்லை. கடவுளும் பெர்னாண்டோவும் சேர்ந்து இதேபோல் இன்னொரு போட்டியிலும் இதே அதிர்ச்சியை எங்களுக்கு தரட்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஸ்சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ மீது அந்த அணியின் பயிற்சியாளர் சண்டோஸ்க்கு அதிருப்தி நிலவியதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால் “எனக்கு என்ன யுக்தி சரியென்று படுகிறதோ எதை நான் நம்புகிறேனோ அதனை களத்தில் பயன்படுத்துவேன்” என்று அவர் கூறியுள்ளதன் மூலம் ரொனால்டோ அடுத்த போட்டியிலும் வெளியேதான் அமர்த்தப்படுவார் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ரொனால்டோ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

related posts