Home இலங்கை கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர்

கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர்

by Jey

உயிரிழந்த பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட  சம்பவம்தொடர்பில்  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (16.12.2022) காலை பொரளை மயானத்திற்குச் சென்றுள்ளனர்.

இதேவேளை தினேஸ் சாப்டரின் கார் பாம் வீதிப் பகுதியில் உள்ள நுழைவாயில் ஊடாக பொரளை பொது மயானத்துக்குள் பிரவேசித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் காரானது மயானத்தில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தகனசாலைகளுக்கு இடையில் பாலடைந்த பகுதியில் உள்ள விமானப்படை நினைவிடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தினேஷ் சாப்டரின் மரணம் மயானத்துக்குள்ளே இடம்பெற்றதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் தனது காருக்குள் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸாரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினேஷ் சாப்டரின் காருக்கு அருகிலிருந்து, சந்தேகத்திற்கிடமான அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்றுள்ளதை மயானத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர் அவதானித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய நபருமான சந்தேகநபரை கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த சந்தேகநபருக்கும், தினேஷ் சாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபா கொடுக்கல், வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் கடத்தப்பட்டு நேற்று மாலை பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் இருந்து கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தினேஷ் சாப்டர் கறுவாத்தோட்டம் ப்ளவர் வீதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியேறி சிறிது நேரத்தின் பின் அவரது மனைவி அவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது, வர்த்தகரின் தொலைபேசி இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய விசாரணை நடத்தியபோது அவரது தொலைபேசி பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

related posts