கனேடிய மக்கள் சளி காய்ச்சல் தடுப்பூசியை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடிய பொது சுகாதார அதிகாரி டாக்டர் திரேசா டேம் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
தற்பொழுது கனடாவில் நிலவி வரும் குளிருடனான காலநிலை காரணமாக சளி காய்ச்சல் நோய் தீவிரமாக பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சளி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதற்காக தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மத்தியில் சளி காய்ச்சல் நோய் வெகு தீவிரமாக பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சளி காய்ச்சல் நோயினால் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் மரணம் சம்பவித்த சிறுவர் சிறுமியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக டாக்டர் டேம் தெரிவித்துள்ளார்.
சளி காய்ச்சல் நோய் உச்ச நிலையை அடைந்திருப்பதனால் மக்கள் இயலுமானவரை துரித கதியில் தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ள முனைப்பு காட்ட வேண்டும் என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கனடாவில் கோவிட் பெருந்தொற்று நோயாளர் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் சளி காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.