பிரான்ஸ் நாட்டின் ரோன் மாகாணம் வால்க்ஸ் என் வெலின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 14 பேரை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.