உலக அளவில் காலரா பரவலானது, இதற்கு முந்தின கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2022-ம் ஆண்டில் காலரா வியாதியானது, 30 நாடுகளில் பரவியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்றியல் வியாதிகளுக்கான குழு தலைவர் பிலிப் பார்போசா ஜெனீவா நகரில் பேசும்போது, நடப்பு சூழ்நிலையானது முற்றிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேறுபட்டு உள்ளது.
கடந்த ஆண்டுகளில் நாம் பார்க்காத வகையில், காலரா பரவல் அதிகம் மட்டுமின்றி, அதிக கொடியதும் ஆகும். தொற்று மற்றும் மரண விகிதங்கள் பல ஆண்டுகளாக பெருமளவில் குறைந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் காலரா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலக அளவில் காலரா பரவுவதற்கு, அனைத்து வகையான காரணிகளும் அதன் பங்கிற்கு ஏற்ப பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளன என அவர் கூறுகிறார். பருவநிலை மாற்றம் எதிரொலியாக சர்வதேச அளவில் இந்த பரவல் அதிகரித்து காணப்படுகிறது.