நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது.
ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இந்த கூட்டத்தொடரும் கடந்த சில நாட்களாக சீன எல்லை மோதல் (தவாங்) விவகாரத்தால் முடங்கி வருகிறது.
இரு சபைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓங்கிக் குரல் கொடுக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிக்கை அளித்ததுடன் முடித்து விட மத்திய அரசு எண்ணுகிறது.
ஆனால் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அடம்பிடித்து வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையே முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.