இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடேயேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ந் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதில் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மற்றும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கே. எல். ராகுல் வழிநடத்தினார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆடிய போது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா 3வது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22ந் தேதி டாக்காவில் தொடங்குகிறது.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் ரோகித் சர்மா விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், வயிற்று தசைப்பிடிப்பு காரணமாக நவ்தீப் சைனியும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்:- கே.எல்.ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், செத்தேஷ்வர் புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், சவுரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்.