உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் வரும் ஜனவரி 13-ஆம் திகதி முதல் 29-ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
அதனையொட்டி ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியா முழுவதும் 14 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஹாக்கி கோப்பை இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
ஹாக்கி கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை தலைமை செயலகத்திற்கு கொண்டுவரப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஹாக்கி உலக கோப்பை காட்சிப்படுத்தப்பட உள்ளது.
அதன்பின் வேறு மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்படும். உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 1982-ம் ஆண்டு மும்பையிலும், 2010-ம் ஆண்டு டெல்லியில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது.