ஆசியாவால் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் டிசே சி லோப் (வயது 59) ஆவான். இவன், சீனாவில் பிறந்தவன், கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவன்.
ஜப்பான் முதல் நியூசிலாந்து வரை ஆசிய பசிபிக் நாடுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவன் என்ற குற்றச்சாட்டு, இவன் மீது உண்டு. இவன் மெக்சிகோ நாட்டின் போதைப்பொருள் மன்னன் எல் சாப்போவுடன் ஒப்பிடப்படுகிறான்.
இவன் கடந்த ஆண்டு நெதர்லாந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இண்டர்போல் என்று அழைக்கப்படுகிற சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனை ஆஸ்திரேலிய போலீசார் 10 ஆண்டு காலமாக தேடி வந்தனர்.
2 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின்னர் அவன் இறுதியாக நேற்று ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டான். மெல்போர்ன் விமான நிலையத்தில் அவன் கை விலங்குடன் அழைத்துச் செல்லப்படும் படங்களை ஆஸ்திரேலிய போலீஸ் வெளியிட்டுள்ளது.
இவன் 1990-களில், அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது