உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில், ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் விரைவாக போரை முடிவுக்குக் கொண்டு வரவே ரஷியா விரும்புவதாக அதிபர் புதின் கூறியுள்ளார். மேலும் ரஷியாவுக்கு உக்ரைன் மற்றும் அமெரிக்கா செவிகொடுக்கவில்லை. ரஷியாவை பலவீனப்படுத்த அமெரிக்கா, உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்துகிறது என்று ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய புதின் கூறும்போது, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
விரைவாக சிறப்பாக போர் முடிவுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தவே நாங்கள் முயலுகிறோம். எல்லா மோதல்களும் ஏதோ ஒரு வகையில் அல்லது பேச்சு வார்த்தையில் முடிவடைகின்றன. நம்முடைய எதிரிகள் எவ்வளவு வேகமாக புரிந்து கொள்ளுகிறார்களோ அவ்வளவு வேகமாக மோதல் முடிவுக்கு வரும் என்று கூறினார். போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு சுமார் 1.8 பில்லியன் டாலர் அளவில் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து எச்சரித்த அதிபர் புதின், இது போரை மேலும் நீட்டிக்கச்செய்யும். எங்களை எதிர்ப்பவர்கள் இது ஒரு தற்காப்பு ஆயுதம் என்று கூறுகிறார்கள். எப்போதும் ஒரு மாற்று மருந்து இருக்கும். இதை செய்பவர்கள் வீணாக போரை நீட்டிக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறினார்.