வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. சுக்மன் கில், கேஎல் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆனால், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 2 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், ஷகீப் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து புஜாரா களமிறங்கியுள்ளார். தற்போதைய நிலவரப்படி 4 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்துள்ளது. போட்டியில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இன்னும் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.