Home உலகம் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை

by Jey

பாகிஸ்தானில் தற்போது தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் தெரிக் – இ – தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கைபர்-பக்துவா மாகாணம் பன்னு நகரில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி அங்குள்ள அதிகாரிகளை பிணைகைதிகளாக பிடித்தது.

பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 40 மணி நேரத்திற்கு பின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர் அதிரடியாக நுழைந்தன. அங்கு தலிபான்களுடன் அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சண்டை நடத்தினர்.

இந்த அதிரடி தாக்குதலில் 33 தலிபான்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், பிணைக்கைதிகளாக இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர். அதேவேளை இந்த மோதலின்போது 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் திடீர் தாக்குதல் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானில் 6 பேரும், ஆப்கானிஸ்தானில் 1 நபரும் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து எல்லையை தாண்டி நடைபெறும் தாக்குதலை தடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பண உதவி வழங்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலால் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.

related posts