கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்றபோது வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் விபத்துக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்டு, வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானமூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான்மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த லேடி ஆர் 3 படகு வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில் விபத்துக்குள்ளானது.
படகு ஆபத்தில் சிக்கியபோது, அங்கிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்புகொண்டு, இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக வியட்நாம் கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது வியட்நாமிய பிரதேசத்தில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்ததோடு, பின்னர், வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு குறித்த படகு குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொண்டது.
மேலும், தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரம் வியட்நாம், சிங்கபூர், பிலிப்பையின்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியிடப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாறி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில் உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடம் மீண்டும் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம் நேரரப்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெரும்பாலும், இவர்கள் நாளை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவர்கள் என முகாமில் இருந்து வருவதற்காக காத்திருக்கும் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.