முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்க மெல்போர்ன் சென்ற போது கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் எதிரான தீர்ப்பு வந்ததால் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் செர்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்த விவகாரம் விளையாட்டு அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஜோகோவிச் ஓராண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.
அங்கு அடிலெய்டு ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் 35 வயதான ஜோகோவிச் அதைத் தொடர்ந்து ஜன.16-ந்தேதி மெல்போர்னில் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனிலும் களம் இறங்க உள்ளார்.
ஆனால் போட்டியின் போது, முன்பு போல் ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் அவருக்கு வரவேற்பு கிடைக்குமா? என்பதே மிகப்பெரிய கேள்வியாகும்.