கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் நடத்தி, போலாந்து மற்றும் துருக்கியில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவினர் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
மேல் படிப்புக்காக இளைஞர்,யுவதிகளை தொழில் வாய்ப்புகளுடன் போலந்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் போர்வையில் நடத்தப்பட்டு வந்துள்ள இந்த நிறுவனம் நபர்களிடம் தலா 5 லட்சத்து 5 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமாக வேலை வாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதற்கு அமைய குறித்த இடத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்ட அதிகாரிகள், அங்கிருந்து 11 கடவுச்சீட்டுக்கள், 4 பற்றுச்சீட்டு புத்தகங்கள், 50 பிரசார துண்டுப்பிரசுரங்கள் உட்பட பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட கணவன், மனைவி நேற்று முன்தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.