காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. காஞ்சீபுரம் மாவட்டத்தின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 284 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் காஞ்சீபுரம்- உத்திரமேரூர் சாலையில் மாகரல் அருகே அமைந்துள்ள செய்யாற்றில் தற்போது வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த செய்யாற்று தரைப்பாலம் சேதம் அடைந்ததையொட்டி புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் மீண்டும் பாலம் துண்டிக்கப்பட்டது. அதனை தற்காலிகமாக சரி செய்து மீண்டும் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் தற்போதும் தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது.