ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளுடன் மூன்று லட்சம் ரூபா ஊதியம் கிடைப்பதாகவும் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு வரி அறவிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் முன்னாள் அமைச்சருமான சந்திரசேன இதனை கூறியுள்ளார். சாதாரண மக்களை விட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வரி என்ற வலை விரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வரியை அறவிடுவது வருமான வரிகளை அறவிடும் அதிகாரிகளின் கட்டாய கடமையாகும். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரக்ள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் வரி செலுத்த வேண்டும்.
பொதுமக்களை விட அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக திகழவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க பொதுஜன பெரமுன இடமளிக்காது.
தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சியில் பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. எனினும் அந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் சந்திரசேன கூறியுள்ளார்.