குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால், தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பட்டாளருமான சேபால் அமரசிங்க எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சேபால் அமரசிங்க நேற்றிரவு பொரலஸ்கமுவை பிரதேசத்தில் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தலதா மாளிகை அவமதிப்பு-கடும் எதிர்ப்புகளை வெளியிட்ட பல தரப்பினர்
இலங்கை உட்பட உலக பௌத்த மக்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் தலதா மாளிகை மற்றும் அங்குள்ள உள்ள புத்தரின் புனித தந்தத்தை அவமதிக்கும் வகையில் சேபால் அமரசிங்க தனது யூ டியூப் வலையெளி ஊடகம் மூலம் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பௌத்த மாநாயக்கர்கள் உட்பட பல தரப்பினர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
அரசியல்வாதிகளையும் சில பிக்குகளை கடுமையாக விமர்சித்த சேபால் அமரசிங்க
சேபால் அமரசிங்க, சமூக ஊடகங்களில் ராஜபக்சவினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசியல்வாதிகள் மற்றும் சில பௌத்த தேரர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார்.