நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்ற கடனுக்கான வட்டி அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியர் குழுவுடன் மக்கள் வங்கியின் பொது முகாமையாளரைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், குறித்த கோரிக்கையை எழுத்து மூலம் முகாமையாளரிடம் கையளித்துள்ளார்.
மக்கள் வங்கியானது பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ‘குரு செத’ கடன்களை வழங்குகிறது.
கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மக்கள் வங்கியில் குறித்த கடனை பெருமளவில் பெற்றுள்ளதோடு, அது தொடர்பான கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்தி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
“இந்த ‘குரு செத’ கடன் கடந்த காலங்களில் 9.5 சதவீத வட்டியில் வழங்கப்பட்டது. அந்த வீதத்திற்கு அமைய கடன் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வட்டி வீதம் 9.5 வீதத்திலிருந்து 15.5 வீதமாக உயர்த்தப்படுமென்ற அறிவித்தல் கடிதம், வங்கி கிளைகளுக்கு ஊடாக கடன் பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” இது ஒரு பாரிய அடக்குமுறை மற்றும் நியாயமற்ற செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கம் வங்கி நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.