சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இணையதளம் மற்றும் கையடக்க கருவியின் மூலம் வழங்கப்பட்ட கட்டண சேவை டிக்கெட்டை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்கான ‘கியூஆர் கோடு ஸ்கேன்’ வசதியை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்
பின்னர் கோவில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- 530 கோவில்களில் 1767 கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படுகின்ற போது கட்டணம் செலுத்தும் சேவை, எண்ணிக்கை மற்றும் அதற்கான கட்டணம் போன்ற விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குரல் ஒலி செய்தியாக அறிவிக்கப்படுகிறது.
இணையதளம் மற்றும் கையடக்க கருவிகள் மூலம் வழங்கப்பட்ட கட்டண சேவைக்கானச் டிக்கெட்டை கோவில்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் ‘கியூஆர் கோடு’ ஸ்கேன் வசதியினை தொடங்கி வைத்துள்ளோம்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 530 கோவில்களில் ஒரு முறை விற்பனை செய்யப்பட்ட கட்டண டிக்கெட்டை மீண்டும், மீண்டும் உபயோகிக்க முடியாது.