Home உலகம் ரவூரி பூஜிதா என்ற மாணவி கூகுள் நிறுவனத்தில் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்

ரவூரி பூஜிதா என்ற மாணவி கூகுள் நிறுவனத்தில் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்

by Jey

உலக அளவில் கூகுள், பேஸ்புக், ஆப்பிள் மற்றும் அமேசான் போன்றவை பெரிய நிறுவனங்களாக உள்ளன. இதுபோன்ற சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கும்.

கை நிறைய அதிக சம்பளத்துடன், வெளிநாட்டு பணி என்ற கவுரவமும் கிடைக்கும். இதற்காக இன்றைய தலைமுறை மாணவர்கள் அதுசார்ந்த படிப்புகளை தேர்வு செய்து படித்து வருகின்றனர். இந்த சூழலில் ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் வசித்து வரும் ரவூரி பூஜிதா என்ற மாணவி கூகுள் நிறுவனத்தில் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இவரது தந்தை தனியார் வங்கி அதிகாரி. இவருக்கு 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரி ஒருவர் உள்ளார். இவரது படிப்புக்கு வழிகாட்ட என்று யாரும் இல்லை என கூறும் இவர், ஒவ்வொரு விசயங்களையும் அவரே தேடி பெற்றிருக்கிறார்.

இதுபற்றி பூஜிதா கூறும்போது, பி.டெக் முதல் ஆண்டு படித்தபோது, நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டது. ஊரடங்கும் அமலுக்கு வந்தது. பலரை போல என்னாலும் கல்லூரிக்கு சென்று படிக்க முடியாமல் போனது. ஆனால், நான் கவலைப்படவில்லை.

மாணவர்களிடம் சந்தேகம் கேட்டு விளக்கங்களை பெறுவேன். என்னால் முடியாதபோது, ஆன்லைனில் விடை தேடுவேன் என கூறுகிறார். ஜே.இ.இ. தேர்வு முடிவில் ஜார்க்கண்டில் உள்ள பிட்ஸ் மையத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என பெற்றோர் கேட்டு கொண்டனர்.

அதனால், குண்டூரில் உள்ள கே.எல். பல்கலை கழகத்தில் பி.டெக் சேர்ந்தேன். அதில் எனது கோடிங் வகுப்புக்கான தொடக்கம் அமைந்தது. ஆன்லைன் வகுப்புகளில் புரியாத விசயங்களை, யூ-டியூப் வீடியோக்களை பார்த்து, கோடிங்கில் தேர்ச்சி அடைந்தேன் என பூஜிதா கூறுகிறார். இதற்காக பல்வேறு தளங்களுக்கு சென்று கோடிங் பயிற்சியை மேற்கொண்டு, மாதிரி தேர்வுகளிலும் பங்கேற்றுள்ளார். பிற திறமைகளையும் வளர்த்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கூகுள், அடோப் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணியாற்ற இவருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதில், கூகுள் வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தில் பணி அனுபவத்திற்கான பயிற்சியில் அடுத்த வாரம் சேர இருக்கிறார். தொடர்ந்து, அடுத்தடுத்து முயன்று உயர் பதவியை பெறுவேன் என அவர் கூறுகிறார்.

 

related posts